Pages

Search This Blog

Friday, December 31, 2010

மித்ரா

மித்ரா

என்னங்க..." என மித்ரா பாசமாய் அழைக்க

"என்னடி? அதிசியமா இன்னிக்கி நல்ல மூட்ல இருக்க?" என தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார் மித்ராவின் கணவன் பிரகாஷ்

"அப்போ தினம் ராட்சசி மாதிரி இருக்கேனா?" என மித்ரா டென்ஷன் ஆக

"ச்சே ச்சே...அதை எப்படி என் வாயால சொல்லுவேன்" என பிரகாஷ் மனைவியை சீண்டினான்

மித்ராவின் பார்வையில் BP ஏறுவதை உணர்ந்த பிரகாஷ், இதுக்கு மேல அவள டென்ஷன் பண்ணினா சொந்த செலவுல சோமாலியாவுக்கு போன கதைதான்னு உஷார் ஆனார்

"சொல்லு மித்து... என்ன மேட்டர்?" என பேச்சை மாற்றினார்

"அது... நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேப்பேன்...நீங்க உண்மையான honest ஆன பதில் சொல்லணும் சரியா?" என மித்ரா கேட்கவும் இப்போ பிரகாஷ்க்கு BP ஏறிடுச்சு

பிரகாஷின் கற்பனை தாறுமாறாக ஓடியது... ஐயையோ... இயர் எண்டு பார்ட்டில ஒரு பெக் அடிச்ச விசயம் லீக் ஆய்டுச்சோ...ச்சே ச்சே இருக்காது... யாரும் சொல்லி இருக்க சான்ஸ் இல்ல... ஒருவேள இந்த ஆனந்த் அவன் wife கிட்ட ஒளறி அவ இவகிட்ட வத்தி வெச்சுருப்பாளோ...ச்சே இதுக்கு தான் இந்த மனைவிகள பிரெண்ட்ஸ் ஆகவே விட கூடாது...ச்சே ச்சே அதெல்லாம் இருக்காது...

ஒருவேள... போன வாரம் இவ பிரெண்ட் வீட்டு மொக்கை பார்ட்டிஐ அவாய்ட் பண்ண ஆபீஸ் வேலைனு சொல்லிட்டு சினிமா போனேனே...எவனாச்சும் பாத்து போட்டு குடுத்து இருப்பானோ... இல்லையே...அதுக்கு தானே அந்த டப்பா தியேட்டர் போனேன்... யாரும் பாத்திருக்க சான்ஸ் இல்ல...

வேற என்ன... ஐயையோ... அதே தான்... அதே தான்... புது அசிஸ்டன்ட் தீபிகா பாவம் மழைல பஸ்க்கு வெயிட் பண்றான்னு லிப்ட் குடுத்த மேட்டரே தான்... மேம்பாலம் கிராஸ் பண்றப்ப யாரோ பாக்கற மாதிரி ஒரு உள்ளுணர்வு தோணுச்சு... ஒரு வைட் மாருதி கிராஸ் பண்ணுச்சே... அட ராமா இவ சித்தப்பா பையன் அருண் கார் வைட் மாருதி தானே... போச்சு... இன்னிக்கி நான் காலி... பேசாம நானே சரண்டர் ஆகறது பெட்டர்...

இப்படி பிரகாஷ் என்ன என்னமோ யோசிச்சுட்டு இருக்க "என்னங்க...எத்தன வாட்டி கூப்பிடறது...என்ன யோசனை அப்படி?" என ஆழம் பார்த்தாள் மித்ரா

"அது...மித்து...என் மேல எந்த தப்புமில்ல...அன்னைக்கி என்ன ஆச்சுனா... ஒரே மழை...பாவம் பஸ் வேற வர்ல... மத்தபடி..." என்றவனை இடைமறித்தாள் மித்ரா

"என்ன சம்மந்தம் இல்லாம என்ன என்னமோ ஒளர்றீங்க? என்ன மழை? என்ன பஸ்?" என மித்ரா சிபிஐ ரேஞ்சுக்கு கேள்விகளை அடுக்க

"அடக்கடவுளே...இவ வேற ஏதோ சொல்ல வந்தா போல இருக்கே... நானே தான் சூனியம் வெச்சுகிட்டனா? ஐயோ...."என மனதிற்குள் புலம்பினான் பிரகாஷ்

"அ... அது... ஆமா நீ என்ன சொல்ல வந்த...அத சொல்லு மொதல்ல..."என பேச்சை மாற்றினான்

ஒரு கணம் யோசனையாய் நோக்கிய மித்ரா, தான் கேட்க வந்ததை கேட்கும் ஆவலில் பிரகாஷ் narrow escape ஆனார்

"அது... உண்மைய சொல்லணும் சரியா?" என மீண்டும் பீதியை கிளப்பினாள் மித்ரா

"நான் எப்ப டி உன்கிட்ட பொய் சொல்லி இருக்கேன்" என ஆஸ்கர் நாயகன் ஆனார் பிரகாஷ்

"சரி...நெஜமா சொல்லுங்க... நான் இப்போ எளைசுட்டேனா இல்ல குண்டாய்டேனா?" என கேள்வி குண்டை தூக்கி போட

"அடிப்பாவி... இதுக்கு நீ நாலு நாளைக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்லி இருந்தா கூட நல்லா இருந்துருக்கும்" என ஜெர்க்கனார் பிரகாஷ்

"என்னது..." என மித்ரா டென்ஷன் ஆக

"சரி சரி...என்ன கேட்ட இன்னொரு தரம் கேளு" என பூகம்பம் வரும் நேரத்தை கொஞ்சம் தள்ளி போட முயன்றார் பிரகாஷ்

"நான் முன்னைக்கு இப்போ எளைசுட்டேனா இல்ல குண்டாய்டேனானு கேட்டேன்"

"ஒரு வாரம் முன்னாடி கூட இந்த கேள்வி கேட்டியேடி" என பாவமாய் ஒரு பார்வையை வீசினார் பிரகாஷ்

"அது ஒரு வாரம் முன்னாடி... அப்போதைக்கு இப்போ என்ன மாற்றம்னு சொல்லுங்க"

"ஹும்... போன வாரம் ஊருக்கு பேசினப்ப எங்கம்மா ஜாதகத்துல கண்டம்னு சொல்றாங்கடா பாத்து இருன்னு இதைதான் சொல்லுச்சோ..." என பிரகாஷ் முணுமுணுக்க

"ஓ...என்னை பாத்தா கண்டமா தெரியுதா..." என மித்ரா கண்ணை கசக்க ஆயுத்தமாக

"ச்சே... ச்சே... அப்படி சொல்வேனா கண்மணி..." என பிரகாஷ் ஒரு ரொமாண்டிக் லுக் விட

"ஐஸ் வெச்சது போதும்...பதில் சொல்லுங்க..."

"அது வந்தும்மா... ஒரு வாரத்துல என்ன மாறும் நீயே சொல்லு" என தப்பிக்க பார்த்தார்

"ஏன் மாறாது? இல்ல ஏன் மாறாதுங்கறேன்.. நான் டையட் இருக்கேன் ஒரு வாரமா"

"ஓ...அப்படியா? சொல்லவே இல்ல...என்ன பண்ணின...?" என ஆர்வமாய் கேட்பது போல் பேச்சை மாற்றினார் பிரகாஷ்

"இந்த பேச்சை மாத்தறதேல்லாம் எனக்கும் புரியும்... பதில் சொல்லுங்க மொதல்ல..." என மித்ரா கறாராய் சொல்லவும், ஒரு முடிவுக்கு வந்த பிரகாஷ்

"இங்க பாருடி... எளைச்சுட்டேன்னு சொன்னா பொய் சொல்றீங்கனு கண்ண கசக்குவ... குண்டாய்டேன்னு சொன்னா வேற வினையே வேண்டாம்... ப்ளீஸ் மித்து... வேற எதாச்சும் கேளேன்... ப்ளீஸ்"

"அப்போ... நான் குண்டாய்டேன்னு சொல்றீங்க இல்ல?" என மித்ரா பரிதாமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க

ஆஹா இவ மொறச்சா கூட பெட்டர் இப்படி பாவமா பாத்தா புலி பதுங்குதுன்னு அர்த்தம்னு அனுபவத்தில் உணர்ந்த பிரகாஷ், "நான் எப்பம்மா அப்படி சொன்னேன்?" என டிரியல் ஆனார்

"இப்ப சொன்னீங்களே...குண்டாய்டேன்னு சொன்னா வேற வினையே வேண்டாம்னு"

"எளைச்சுட்டேன்னு சொன்னா பொய் சொல்றீங்கனு கண்ண கசக்குவனு கூடத்தான் சொன்னேன்..."

"சரி விடுங்க...நான் குண்டு தான்... உங்களுக்கு மேல் வீட்டு மேனாமினிக்கி ரூபா தான் கண்ணுக்கு அழகா தெரிவா.. என்னை எல்லாம் பாத்தா இப்படி தான் இளக்காரமா இருக்கும்" என இன்ஸ்டன்ட் fountain உற்பத்தியானது கண்ணில்

"ஒகே.. ஸ்டேஜ் 2 வந்தாச்சு(அழுகை படலம்) இனி உஷாரா பேசணும்" என புரிந்த பிரகாஷ்

"ச்சே ச்சே...அப்படி இல்லடி செல்லம்... ஒரு மேட்டர் சொல்லட்டுமா? இப்ப நம்ம குஷ்பூவ எடுத்துக்கோ..." எனவும், மித்ரா அழுகைய நிறுத்தி முறைக்க

"ஐயோ...அப்படி எல்லாம் பாக்காத... சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்... குஷ்பு ஒல்லியானா பாக்க சகிக்குமா? சிலர் குண்டா இருக்கறது தான் அழகு... அப்படி தான் நீயும்" என ஒரு பிரச்சனையை முடித்த சந்தோசத்தில் பிரகாஷ் பெருமூச்சு விட்டார்

ஆனால் இனி தான் விபரீதம் என்பது புரியாமல்... (!!!)

"ஓ...அப்ப நான் குண்டுன்னு முடிவா சொல்றீங்க?" என மித்ரா கொக்கி போட தான் தெளிவாய் சிக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த பிரகாஷ் தப்பிக்க வழி புரியாமல் திருதிருவென விழித்தார்

"அப்படி இல்லடி..." என சமாளிக்க முயல

"ஆனா இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்" என்றாள் மித்ரா தீர்மானமாய்

"அடிப்பாவி...மனசாட்சியே இல்லாம பேசுறியே..." என டென்ஷன் ஆன பிரகாஷ், ஒரு கணம் யோசித்தவர் "ஓ... நான் உன்னை சந்தோசமா வெச்சுருக்கரதால தான் குண்டா இருக்கேனு பாராட்டுரயா...தேங்க்ஸ்டி செல்லம்" என பிரகாஷின் முகத்தில் பல்பு எரிந்தது

"இல்ல... ரெம்ப Stress ஆனா கூட வெயிட் போடுவோம்னு recent statistics சொல்லுது you know?" என பிரகாஷின் முக பல்பை அணைத்து அவருக்கு பல்பு வழங்கினாள் மித்ரா

"நேரம்டி...எல்லாம் நேரம்..."

"இங்க பாருங்க...இன்னிக்கி தேதி என்ன? டிசம்பர் 31... விடிஞ்சா 2011 .... இப்ப சொல்றேன் கேட்டுகோங்க... என்னோட New Year Resolution இதான். நான் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த வெயிட்க்கு வந்து காட்றேன்...challenge ?" என மித்ரா கூற

"இதே சபதம் தான போன வருசமும் எடுத்த?"னு கிராஸ் கொஸ்டின் கேக்கற அளவுக்கு பிரகாஷ் லூசு இல்லையே... அனுபவப்பட்ட கணவன் ஆச்சே...ஹா ஹா ஹா

"சூப்பர் மித்து... நீ சொன்னா சொன்ன மாதிரி செய்வே... குட் லக்... ஹாப்பி நியூ இயர்" என எஸ்கேப் ஆனார் பிரகாஷ்

என்னங்க நீங்களும் New Year Resolution எல்லாம் எடுத்தாச்சா? குட் லக் டு யு டூ... ஹாப்பி நியூ இயர்...

ஏன் உயிர் விட வேண்டும்

என் காதலிக்கு...

நீ காதலி, அன்புடையவள் அல்ல என்பதை அறிவேன். இந்த அறிதலின் மேல் வைத்த காதலில் மட்டுமே இந்தக் கடிதமேயொழிய உன் மேல் காதல் துளியும் கிடையாது. கண்ணாடியில் கல் எறிந்து, அது உடைவதை வேடிக்கைப் பார்க்கும் குழந்தையைப் போல நீ என்னைக் காதலிக்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறாய். நான் நொறுங்கி விழுந்த பொழுதுகள் அத்துணையிலும் உன் கால் என் கண்ணீர் துகள்களில் பட்டுக் கிழியாமல் இருப்பதற்காக சற்று தள்ளியே நொறுங்கியிருக்கிறேன்.


கடல் அலைகளில் பெயர் எழுதுவது வேடிக்கையென்றேன். நீ கேளாமல் எழுதி, நம் காதலை அலைகள் தழுவட்டுமென்றாய். அவைகளோ அழித்துப் போயின, அழிந்தும் போயின.
உன் கோபங்கள் எப்பொழுதுமே, தூக்க மறுத்த அம்மாவிடம் குழந்தை காட்டும் கோபம் போல்தான் என நினைத்து, ஏமாந்து போன குழந்தை நான். உன் கோபங்கள் பக்கத்து வீட்டுக்காரனது போன்றவை. நெஞ்சம் கொஞ்சமும் அல்லாது, வஞ்சமும், பாச வறட்சியும் மட்டுமே நிறைந்தது.

எதிர்பார்த்தாய். ஏமாந்துபோனாய். கோபப்பட்டாய். வெளியேறினாய். காதலிக்க மட்டும் இல்லவே இல்லை. என்னைக் காதலிப்பதாய் அடிக்கொரு முறை என் கைப்பற்றி சொன்னாலும் கூட, அடிப்பாவி நீ காதலிக்கவே இல்லை.
நீ ஏன் பிரிந்தாய் என எழுதவோ, சொல்லவோ நேரமில்லையெனக்கு. அது பிடிக்கவுமில்லை. ஏன், எனக்கு அது தெரியவே தெரியாது!!
இன்று இதை எழுதுவதும், நீ இல்லாது, நான் எப்படியிருக்கிறேன் எனத் தெரியத்தான். எனக்கும், உனக்கும், நமக்கும், உலகத்துக்கும்.

உன்னைக் காதலிக்க ஆயிரம் காரணம் இருந்தது என்னிடம். உன்னைப் போன்ற மகள் வேண்டும் என்பதில் இருந்து உன்னையே மகள் போல் பாதுகாக்க வேண்டுமென்பது வரை. உன்னைப் பற்றி எனக்கு எல்லாமும் தெரியுமென்றே நினைத்திருந்தேன். எல்லாம் அல்ல எதுவுமே தெரியாது எனப் புரிந்தது என்னையும் காதலையும் ஏதோ முகம் துடைக்கும் காகிகதத்தைப் போல் நீ எறிந்தபோது. நைந்துபோனேன் நான். கிழிந்துபோனது காதல்.

காதலி பிரிந்ததற்காக உயிர் விடும் ஆண்மையில் அழுக்குப் படிந்த ஆண் நான் கிடையாது. எனக்கானவள், எனக்கருகில் இருந்த நீ அல்ல எனத் தெளிவாய் உணர்த்திச் சென்றிருக்கிறாய். இத்தனை பெண்களில் எவள் என்னவள் எனத் தெரியாவிடினும், நீ அவள் கிடையாது எனக் கூறிச்சென்றிருக்கிறாய். எதற்காய் உயிர் விட?

உலகில் உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களென எனக்குத் தெரியும். அவர்களுக்கு உன்னைப் போல் அல்லாது, கொஞ்சமேனும் அன்புக்கு அர்த்தம் தெரிந்திருக்கக்கூடும். அவர்களில் யாரோ ஒருத்தி எனக்கானவளாக இருக்கலாம். நினைக்கையில் மனம் திரும்பப் புதிதாய் பிறக்கிறது. உயிர்போகும் வலி கொடுத்து உடலில் இருந்து பிய்ந்து போகும் நகம் போலத்தான் தோற்றமளிக்கிறாய் நீ. எதற்காக உயிர் விட?

எப்போதாவது நாம் உறவாடிய பொழுதுகள் உன் நெஞ்சைத் துளைத்து என்னிடம் வருவாயென என் 'இரு'தயத்தின் 'ஒரு தயம்' சொல்லும் போதெல்லாம், அவசரமாய் என் 'மறு தயம்' கேட்கிறது, "மீண்டும் செத்துப் போகப்போகிறாயா?" என்று. எனது ஆனந்தம் ஆரம்பமாவதும், முடிவுறுவதும் எனக்குள் தான், எனக்குள் மட்டும் தான் என தாமதமாய் உணர்த்தினாலும் சரியாக உணர்த்திப் போயிருக்கிறாய். நான் உயிருடன் இருக்கும் போது, பின் எதற்காக உயிர் விட?

உனக்காய் நான் செய்து வைத்த மனைவிக்கான அரியணையில், நீ, அனுபவம் எனும் பூவை வைத்துவிட்டுப் போயிருக்கிறாய். உன்னைக் காதலித்ததைவிட அதிகமாய் நாளை என் மனைவியைக் காதலிக்கக் கற்றுக் கொடுக்கும் அந்தப் பூ. பின் எதற்காக உயிர் விட?

உண்மையாய் காதலிக்காமல் பிரிந்து சென்ற நீயே, என்னைக் காதலிக்க வைக்க முடியுமெனில். நாளை என்னை உண்மையாய் காதலிக்கப் போகிறவள் என்னை என்செய்ய வைப்பாளோ? அதை அனுபவிக்காமல் நான் ஏன் உயிர் விட?

அழகும், அன்பும், காதலும், காமமும் சரியாய் கலந்து நாளை நான் பெறப்போகும் குழந்தையின் கொஞ்சல்களைக் கேட்காமல் செத்தொழிந்து போனால் என் ஆறரிவில் அர்த்தமில்லை என்றே அர்த்தம்.

ஆனாலும்.....

அவ்வப்போது நான் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, என்
தலைக் கவசத்துக்குள் வந்து போகும் உன் கூந்தல் வாசம். லேசாய் என்னை அழவைத்துப் பார்க்கும்.
என் பணப்பையில் எப்போதோ நான் வைத்த உன் புகைப்படம் மங்கிப் போய் இருக்கும், இன்னமும். அதை எடுத்தெறிய எத்தனிக்கும் போதெல்லாம் இன்னும் மங்காமல் மனதின் மூலையில் ஒட்டியிருக்கும் உன் நினைவுக் குப்பைகளில் ஏதோ ஒரு குப்பை என்னைத் தடுக்கும்.
இவை மட்டுமே நான் உன்னை உண்மையாய் காதலித்ததை இன்னமும் எனக்கு சொல்லிக் கொண்டிருப்பவை. காதலிக்கத் தெரிந்தவன் நான், என எனக்கு உணர்த்திக் கொண்டிருப்பவை.
உலகில், மனித கலாச்சாரத்தில் அரிதாய்ப் போன 'காதல்' என்னும் கலையை கற்று தெரிந்த நான், ஏன் உயிர் விட வேண்டும்??????


Tuesday, December 21, 2010

இறைவனிடம் கேட்டேன்.

இறைவனிடம் கேட்டேன்.

நான் இறைவனிடம் சோதனைகளை வெல்லக்கூடிய வலிமையை கேட்டேன்.
அவன் எனக்கு சோதனைகளை கொடுத்தான்.

சிக்கல்களை தீர்க்க வல்ல ஆற்றலை கேட்டேன்.
எனது ஆற்றலை வளர்க்க சிக்கல்களை கொடுத்தான்.

பயத்தை வெல்லக்கூடிய தைரியத்தை கேட்டேன்.
அவன் பயம் மிகுந்த சூழ்நிலையை கொடுத்தான்.

அன்புக்காக நான் ஏங்கித்தவித்தேன்.
அன்பு காட்ட பாவப்பட்ட மனிதர்களை என்னுடன் அனுப்பி வைத்தான்.

இறைவனிடம் செல்வம் கேட்டேன்.
நான் கடுமையாக உழைக்க அவன் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தான்.

நான் கேட்ட அனைத்தும் அவன் எனக்கு தர வில்லை,
அதே சமயம் எனக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் அவன் எனக்கு தந்தான்.

எப்போதும் நான் கேட்பதை அப்படியே இறைவன் நம் கையில் தூக்கித் தர மாட்டன் அனால் நாம் விரும்புவதை அடையக் கூடிய பாதையை காட்டுவான்.