என் காதலிக்கு...
நீ காதலி, அன்புடையவள் அல்ல என்பதை அறிவேன். இந்த அறிதலின் மேல் வைத்த காதலில் மட்டுமே இந்தக் கடிதமேயொழிய உன் மேல் காதல் துளியும் கிடையாது. கண்ணாடியில் கல் எறிந்து, அது உடைவதை வேடிக்கைப் பார்க்கும் குழந்தையைப் போல நீ என்னைக் காதலிக்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறாய். நான் நொறுங்கி விழுந்த பொழுதுகள் அத்துணையிலும் உன் கால் என் கண்ணீர் துகள்களில் பட்டுக் கிழியாமல் இருப்பதற்காக சற்று தள்ளியே நொறுங்கியிருக்கிறேன்.
கடல் அலைகளில் பெயர் எழுதுவது வேடிக்கையென்றேன். நீ கேளாமல் எழுதி, நம் காதலை அலைகள் தழுவட்டுமென்றாய். அவைகளோ அழித்துப் போயின, அழிந்தும் போயின.
உன் கோபங்கள் எப்பொழுதுமே, தூக்க மறுத்த அம்மாவிடம் குழந்தை காட்டும் கோபம் போல்தான் என நினைத்து, ஏமாந்து போன குழந்தை நான். உன் கோபங்கள் பக்கத்து வீட்டுக்காரனது போன்றவை. நெஞ்சம் கொஞ்சமும் அல்லாது, வஞ்சமும், பாச வறட்சியும் மட்டுமே நிறைந்தது.
எதிர்பார்த்தாய். ஏமாந்துபோனாய். கோபப்பட்டாய். வெளியேறினாய். காதலிக்க மட்டும் இல்லவே இல்லை. என்னைக் காதலிப்பதாய் அடிக்கொரு முறை என் கைப்பற்றி சொன்னாலும் கூட, அடிப்பாவி நீ காதலிக்கவே இல்லை.
நீ ஏன் பிரிந்தாய் என எழுதவோ, சொல்லவோ நேரமில்லையெனக்கு. அது பிடிக்கவுமில்லை. ஏன், எனக்கு அது தெரியவே தெரியாது!!
இன்று இதை எழுதுவதும், நீ இல்லாது, நான் எப்படியிருக்கிறேன் எனத் தெரியத்தான். எனக்கும், உனக்கும், நமக்கும், உலகத்துக்கும்.
உன்னைக் காதலிக்க ஆயிரம் காரணம் இருந்தது என்னிடம். உன்னைப் போன்ற மகள் வேண்டும் என்பதில் இருந்து உன்னையே மகள் போல் பாதுகாக்க வேண்டுமென்பது வரை. உன்னைப் பற்றி எனக்கு எல்லாமும் தெரியுமென்றே நினைத்திருந்தேன். எல்லாம் அல்ல எதுவுமே தெரியாது எனப் புரிந்தது என்னையும் காதலையும் ஏதோ முகம் துடைக்கும் காகிகதத்தைப் போல் நீ எறிந்தபோது. நைந்துபோனேன் நான். கிழிந்துபோனது காதல்.
காதலி பிரிந்ததற்காக உயிர் விடும் ஆண்மையில் அழுக்குப் படிந்த ஆண் நான் கிடையாது. எனக்கானவள், எனக்கருகில் இருந்த நீ அல்ல எனத் தெளிவாய் உணர்த்திச் சென்றிருக்கிறாய். இத்தனை பெண்களில் எவள் என்னவள் எனத் தெரியாவிடினும், நீ அவள் கிடையாது எனக் கூறிச்சென்றிருக்கிறாய். எதற்காய் உயிர் விட?
உலகில் உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களென எனக்குத் தெரியும். அவர்களுக்கு உன்னைப் போல் அல்லாது, கொஞ்சமேனும் அன்புக்கு அர்த்தம் தெரிந்திருக்கக்கூடும். அவர்களில் யாரோ ஒருத்தி எனக்கானவளாக இருக்கலாம். நினைக்கையில் மனம் திரும்பப் புதிதாய் பிறக்கிறது. உயிர்போகும் வலி கொடுத்து உடலில் இருந்து பிய்ந்து போகும் நகம் போலத்தான் தோற்றமளிக்கிறாய் நீ. எதற்காக உயிர் விட?
எப்போதாவது நாம் உறவாடிய பொழுதுகள் உன் நெஞ்சைத் துளைத்து என்னிடம் வருவாயென என் 'இரு'தயத்தின் 'ஒரு தயம்' சொல்லும் போதெல்லாம், அவசரமாய் என் 'மறு தயம்' கேட்கிறது, "மீண்டும் செத்துப் போகப்போகிறாயா?" என்று. எனது ஆனந்தம் ஆரம்பமாவதும், முடிவுறுவதும் எனக்குள் தான், எனக்குள் மட்டும் தான் என தாமதமாய் உணர்த்தினாலும் சரியாக உணர்த்திப் போயிருக்கிறாய். நான் உயிருடன் இருக்கும் போது, பின் எதற்காக உயிர் விட?
உனக்காய் நான் செய்து வைத்த மனைவிக்கான அரியணையில், நீ, அனுபவம் எனும் பூவை வைத்துவிட்டுப் போயிருக்கிறாய். உன்னைக் காதலித்ததைவிட அதிகமாய் நாளை என் மனைவியைக் காதலிக்கக் கற்றுக் கொடுக்கும் அந்தப் பூ. பின் எதற்காக உயிர் விட?
உண்மையாய் காதலிக்காமல் பிரிந்து சென்ற நீயே, என்னைக் காதலிக்க வைக்க முடியுமெனில். நாளை என்னை உண்மையாய் காதலிக்கப் போகிறவள் என்னை என்செய்ய வைப்பாளோ? அதை அனுபவிக்காமல் நான் ஏன் உயிர் விட?
அழகும், அன்பும், காதலும், காமமும் சரியாய் கலந்து நாளை நான் பெறப்போகும் குழந்தையின் கொஞ்சல்களைக் கேட்காமல் செத்தொழிந்து போனால் என் ஆறரிவில் அர்த்தமில்லை என்றே அர்த்தம்.
ஆனாலும்.....
அவ்வப்போது நான் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, என்
தலைக் கவசத்துக்குள் வந்து போகும் உன் கூந்தல் வாசம். லேசாய் என்னை அழவைத்துப் பார்க்கும்.
என் பணப்பையில் எப்போதோ நான் வைத்த உன் புகைப்படம் மங்கிப் போய் இருக்கும், இன்னமும். அதை எடுத்தெறிய எத்தனிக்கும் போதெல்லாம் இன்னும் மங்காமல் மனதின் மூலையில் ஒட்டியிருக்கும் உன் நினைவுக் குப்பைகளில் ஏதோ ஒரு குப்பை என்னைத் தடுக்கும்.
இவை மட்டுமே நான் உன்னை உண்மையாய் காதலித்ததை இன்னமும் எனக்கு சொல்லிக் கொண்டிருப்பவை. காதலிக்கத் தெரிந்தவன் நான், என எனக்கு உணர்த்திக் கொண்டிருப்பவை.
உலகில், மனித கலாச்சாரத்தில் அரிதாய்ப் போன 'காதல்' என்னும் கலையை கற்று தெரிந்த நான், ஏன் உயிர் விட வேண்டும்??????
No comments:
Post a Comment