பொசசிவ் என்ற போர்க்களம்..
ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி.. பொதுவா இந்த குணம் இல்லாத யாரையும் பாக்க முடியாது. சின்ன சின்ன விசயத்துல கூட நம்முடைய பொசசிவ் குணம் நம்மளையும் அறியாம வெளிப்படும். உதாரணத்துக்கு சின்ன குழந்தைங்க தங்களோட விளையாட்டுப் பொருட்கள அடுத்த சிறுவர்கள் எடுத்தா கோவப்பட்டு புடுங்கிடுவாங்க. அதுல கூட பொசசிவ் இருக்கு. அது தப்புனு சொல்ல முடியாது. மனிதர்களுக்கே இருக்குற இயற்கையான குணம் தான். ஆனா வாழ்க்கைல நாம எந்த சூழ்நிலைல எப்படி அந்த குணத்த வெளிப்படுத்துறோம்குறதுல தான் இருக்கு பிரச்சனை.
”நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்”னு ஒரு கவிதை உண்டு.
இதை யாரும் செய்யலாம். ஆனா அந்தப் பறவை திரும்ப வருமானு யோசிச்சு அது என்ன பண்ணுதுனு கண்காணிச்சுகிட்டே இருக்குறவங்களும் இருக்காங்க..
நாம் நேசிப்பவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது தான் பொசசிவின் ஆரம்பம். (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?? கஜினி சூர்யா சொன்ன டைலாக்க கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேங்க..)
அதிகமான அன்போட வெளிப்பாடு தான் பொசசிவ்னு சிலர் சொல்லலாம். இது வார்த்தைக்கு வேணும்னா அழகா தோணலாம். ஆனா அடிப்படைல யோசிச்சோம்னா ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் நம்பிக்கையின்மையும் கலந்த வெளிப்பாடு தான்னு தோணுது.
நாம ரொம்ப நேசிக்கிறவங்க வேற ஒருத்தர் கூட பேசும்போதும் பழகும்போதும் அந்த மூன்றாவது நபர் மேல ஒருவித கோபம் உண்டாகும். அவங்கள விட நாம எந்த விதத்துலயும் குறையா இல்லயேனு நமக்கு நாமே கேள்வி கேட்டுக்குவோம். அவங்களப் பத்தி பேச்செடுத்தாலே எரிஞ்சு விழுவோம். இது காதலர்களுக்கிடைல அதிகமா நடக்கும்.
தன் காதலி ஒரு பையன்கிட்டயோ, அல்லது காதலன் ஒரு பொண்ணுகிட்டயோ சாதாரணமாப் பேசுறத கூட அவங்க விரும்புறதில்ல.
அத விட.. அவங்க செல்போன்ல வெய்ட்டிங் கால் வந்துச்சுனா போதும்.. யார் கூட பேசிகிட்டு இருந்த? எதுக்கு பேசினனு கேட்டுக் கேட்டுக் கொன்னெடுத்துடுவாங்க.
இது ஆரம்ப நாட்கள்ல சாதாரணமான வாக்குவாதமா ஆரம்பிச்சு நாளாக நாளாக சந்தேகமா மாறுது. நமக்குப் பிடிச்சவங்க நம்மளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நெனக்கிறது தப்பில்ல. அதே சமயத்துல நம்மளோட விருப்பங்கள அவங்கமேல திணிக்கிறது தான் தவறு. இது அடுத்தவங்களோட சுதந்திரத்த பறிக்கிற மாதிரியான செயல் தான்.
காதலிலும் நட்பிலும் இந்த பொசசிவ் குணத்தின் சதவிகிதம் அதிகமாவே இருக்கு. இதுல ஆண் பெண்ணுங்குற பாகுபாடெல்லாம் இருக்குறதில்ல. இங்க பரஸ்பர புரிதல்ங்குறதே இல்லாம போய்டுது.
தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுகிட்டு அடுத்தவங்களையும் அந்தக் கோட்டுக்குள்ளயே இருக்கணும்னு கட்டாயப்படுத்துறாங்க. இது ஒரு நிலைக்கு மேல வெறுப்பைத்தான் உண்டாக்குது.
அந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும்போது தான் ஒருத்தருக்குப் பிடிக்காத விசயத்த அவங்களுக்குத் தெரியாம மறச்சு செய்யணும்குற கட்டாயம் உண்டாகும். அதாவது நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, நமக்குப் பிடிக்காதவங்க கூட பேசுறது நமக்குப் பிடிக்கலைனு சொல்லும்போது, நமக்குப் பிடிச்சவங்க, பிடிக்காத அந்த நபர் கூட நமக்குத் தெரியாம பேசுற சூழ்நிலை உருவாகும்னு சொல்றேன். (தெளிவாப் புரிஞ்சிருக்குமே..).
இன்னும் சொல்லப் போனா இந்தப் பொசசிவ் குணத்தால எந்த சந்தோசமும் நிம்மதியும் வந்துடப்போவதில்ல. மாறாக சண்டையும் மன அழுத்தமும் பிரிவும் தான் வரும்.
ஆனாலும் இந்தப் பிரச்சனைக்கு (நிரந்தரமான அல்லது தற்காலிகமான) பிரிவு மட்டுமே இதுக்கு சரியான தீர்வாகாது. சரியான புரிதலும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தாலே போதும். குறிப்பா ஈகோ பாக்காம தங்களோட கோபங்கள தள்ளிவச்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு வெளிப்படையா பேசினாலே பிரச்சனை தீர்ந்துடும்
No comments:
Post a Comment