Pages

Search This Blog

Friday, September 2, 2011

பணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!




டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.

சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்று படித்திருப்பீர்கள்.(மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்.

தன் மக்களில் ஒரு சிலர் மட்டும் பணக்காரர் ஆகிக்கொண்டே போக பலரும் ஏழையாக இருப்பது ஏன் என்று கவலை கொண்டார் மன்னர். மந்திரியை அழைத்து ஏன் இப்படி நடக்கிறதென்று கேட்டார்.

அதற்கு மந்திரி “ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டு சிலர் முன்னேறுவதைத் தவறென்று சொல்ல முடியாதே?” என்று கேட்டார்.

“நீர் சொல்வதும் சரி தான்..ஆனால் அந்த ரகசியம் தெரிந்தவர் ஏன் அதை தெரியாதோருக்கும் சொல்லக்கூடாது அமைச்சரே?..யார் இந்த பாபிலோனின் பெரும் பணக்காரர்?” என்றார் மன்னர்.

”ஆர்கட் தான்..கடும் வறுமையுடன் இளம்வயதில் கஷ்டப்பட்டவன். இப்போது நம் நாட்டிலேயே அவன் தான் பணக்காரன். அவனை நாம் கேட்கலாம் “ என்று மந்திரி சொன்னதை மன்னரும் ஆமோதித்தார்.

அரசவைக்கு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டான் ஆர்கட். மக்களும் அங்கே குழுமினர். மன்னரே விஷயத்தை எடுத்துச் சொன்னார்.

“ஆகவே ஆர்கட், ஏழையாக இருந்த நீ எப்படி பணக்காரன் ஆனாய் என்று மக்களுக்குச் சொல். அவர்களும் அவ்வாறே செய்து முன்னேறட்டும்” என்றார் மன்னர்.

ஆர்கட் பேச ஆரம்பித்தான் :

எனது இளம்பருவத்தில் நான் மிகவும் ஏழையாக இருந்தேன். காலியான பர்ஸும், பணக்காரன் ஆகவேண்டுமென்ற தீராத ஆசையுமே என்னிடம் அப்போது இருந்தது. எனது மெலிந்து நலிந்து போயிருந்த என் பர்ஸை பெருக்க வைக்க என்ன வழிகள் என்று தீவிரமாக யோசித்தேன். ஏழு ஸ்டெப்ஸைக் கண்டு பிடித்தேன். அதை இங்கே சொல்கிறேன், கேளுங்கள்.

1. பர்ஸைப் பருக்க வையுங்கள் :

’பர்ஸ் என்ன நமீதாவா..பெருக்க வைக்க?’ என்று விதண்டாவாதம் பேசினால் உருப்படவே மாட்டீர்கள், கடைசி வரை கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம் ஆகவே இருக்க நேரிடும். எனவே நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் மாதா மாதம் சம்பளம் வாங்கும்ப்போது, உங்கள் பர்ஸ் தடிமனாக இருக்கிறது. நாளாக நாளாக அனைத்துப் பணமும் காலியாகி பர்ஸ் மெலிந்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸை குண்டாக்குங்கள்.


அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்காரணம் கொண்டும் செலவளிக்க எடுக்காதீர்கள். அது பர்ஸிலேயே இருக்கட்டும்.(சரிய்யா..பேங்குலயே இருக்கட்டும்)

நீங்கள் மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவராக இருந்தால்கூட, எக்காரணம் கொண்டும் 1000 ரூபாயை வெளியே எடுத்துவிடாதீர்கள். அது உங்கள் பணம் அல்ல, உங்கள் எதிர்காலத்தின் பணம் என்று ஞாபகம் வையுங்கள். அவ்வாறு உங்கள் பேங்க் பேலன்ஸ் ஏறஏற, பணக்காரர் ஆவது பற்றி பாசிடிவ்வாக உணர ஆரம்பிப்பீர்கள்.
2. செலவைக் குறைங்கப்பா :

’சம்பாதிக்கிறதுல 10%ஆ..சான்ஸே இல்லை’ என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ’மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு ‘ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?


உங்கள் மாதாந்திரச் செலவுகளை எக்ஸெல்லிலோ, நோட்டிலோ எழுதி வையுங்கள். ஒவ்வொரு ரூபாயும் எந்த வழியில் செலவாகிறது என்று குறித்து வாருங்கள். கொஞ்ச நாட்களில் உங்களுக்கே தெரியும், எந்தச் செலவைச் சுருக்கினால் இந்த 10% சேமிப்பை செய்ய முடியும் என்று.

சம்பாத்தியத்தில் 10% எடுத்து வைத்துவிட்டு, மீதியில் மட்டுமே குடும்பத்தை ஓட்டுவோம் என்று உறுதி கொண்டீர்கள் என்றால், பணக்காரர் ஆவதின் இரண்டாவது படியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.

3. பணத்தைப் பெருக வையுங்கள்:

’இப்பத்தான் பர்சைப் பெருக்க வையின்னான்..அடுத்து பணத்தையுமா.பணத்தை எப்படி,,’-ன்னு நீங்கள் விவகாரமாக யோசிப்பது புரிகிறது. இப்போது உறுதியுடன் நீங்கள் 10% -ஐ சேமித்து வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அந்தப் பணத்தை வெறுமனே பேங்கிலோ வீட்டிலோ வைத்தால் என்ன ஆகும்?

பண வீக்கம் என்ற அரக்கனைப் பற்றித் தெரியும் இல்லையா? செங்கோவி சொன்ன பயங்கரமான பீரோ உதாரணம் ஞாபகம் இருக்கிறது, இல்லையா?

எனவே அந்தப் பணத்தை பணவீக்கத்திற்கு எதிராக, உங்களுக்கு ஆதரவாக உழைக்க விடுங்கள். பணவீக்கம் வருடத்திற்கு 7% என்றால், உங்கள் பணம் இண்ட்ரஸ்ட்டாக சம்பாதிப்பது 7 %க்கு மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால், அது தன் மதிப்பை இழந்து கொண்டே போகும். எனவே 7%க்கு மேல் அதிக வருமானம் எங்கே கிடைக்கும் என்று பார்த்து முதலீடு செய்யுங்கள்.


நீங்கள் பணத்திற்காக வேலை செய்வது போலவே, பணம் உங்களுக்காக வேலை செய்யட்டும்.

4. சேமிப்பை இழப்பில் இருந்து காப்பாற்றுங்கள் :

இப்போது அடுத்த முக்கியமான ஸ்டெப்..பணவீக்கத்துக்குப் பயந்து 50% வட்டி தர்ற டுபாக்கூர் ஃபைனான்ஸ் கம்பெனிங்ககிட்ட உங்க பணத்தைக் கொடுத்தா என்ன ஆகும்? தலையில் துண்டு தான் இல்லையா? எனவே எங்கே உங்கள் முதல் பாதுகாப்பாக இருக்குமோ, அங்கே முதலீடு செய்யுங்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் முதலுக்கு மோசம் வராத இடமாகப் பார்த்து முதலீடு செய்யுங்கள். அது நீங்கள் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம். நாம் அவ்வாறு கஷ்டப்பட்டது அவற்றை இழப்பதற்கு அல்ல. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் வரும்போது, தங்கம் வாங்குங்கள். நிலத்தில், அரசுப்பத்திரங்களில், பங்குச்சந்தையில் என உங்களுக்குச் சரியான இடம் பார்த்து முதலீடு செய்யுங்கள். அறிந்தோரிடம் ஆலோசனை கேளுங்கள்.

5. பணம் சம்பாதிக்கட்டும் பணத்தை! :

இவ்வாறு உங்கள் சேமிப்பு சரியான இடத்தில் உங்களுக்காக உழைத்து சம்பாதித்துக்கொடுக்கும். இப்போது என்ன செய்வீர்கள்? உடனே பீட்ஸாவும் புடவையும் வாங்கி, எஞ்சாய் செய்தீர்கள் என்றால், கவுண்டர் செந்தில் முகத்தில் முழித்த மாதிரி ஊஊ தான்!

உங்கள் பணம் சம்பாதித்த பணத்தை மீண்டும் முதலீட்டிலேயே போடுங்கள். வீடு வாங்கி வாடகைக்கு விட்டதால் வரும் பணம் என்றால் வாடகையைச் செலவழிக்காமல் வங்கியில்போடுங்கள். வங்கியில் இருந்து வட்டி வருகிறதென்றால், அதைத் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். அந்தப் பணம், உங்கள் முதலீட்டு முறைகளில் ஒன்றுக்கே திரும்பச் செல்லட்டும்.

அது உழைப்பில் பிறந்த, உழைக்கப் பிறந்த பணம். அதை ஸ்வாஹா செய்யாமல் உழைக்க விடுங்கள்.

6. காப்பீடு செய்யுங்கள் :

சம்பாதிப்போர் பெரும்பாலானோர் செய்யும் தவறு இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிலும் சேராமல் இருப்பது. உங்களையும், உங்கள் முதலீட்டையும் காப்பீடு செய்யுங்கள். செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும் இக்காலத்தில், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காவும் மருத்துவம் உள்ளிட்ட காப்பீடுகளை இப்போதே எடுத்து வையுங்கள். எதிர்பாராத நேரத்தில் அது உதவும்.

7. உங்கள் சம்பாதிக்கும் திறனைக் கூட்டுங்கள் :

இந்த மாதிரி நம் பணம் நமக்காக உழைக்க ஆரம்பித்தவுடன், பலரும் செய்யும் தவறு சந்தோசத்தில் தனது சம்பாத்தியத்தைப் பெருக்குவதில் கோட்டை விடுவது தான். பணத்திற்குப் போட்டியாக நீங்களும் உழைக்க வேண்டிய நேரம் இது. பலநாள் போராடி, செலவுகளைக் குறைத்து செல்வந்தர் ஆக ஒரு வழியினை உருவாக்கி விட்டீர்கள்.

இன்னும் 10%-ஐ தனியே ஒதுக்கிக்கொண்டே இருக்கின்றீர்கள். உங்கள் சம்பளம் கூடக்கூட அந்த 10% தொகையும் கூடும், அதன் மூலம் முதலீடும் கூடும் ,அதன்மூலம் நம் வருங்காலத்திற்கான செல்வமும் கூடும்.

எனவே சொகுசு கண்டு, சோம்பி விடாதீர்கள். Rich Dad-Poor Dad புகழ் ராபர்ட் கியோசாகி ஒரு முறை சொன்னது போல் பணக்காரர் ஆவது நீண்ட நாள் எடுக்கும், போரடிக்கும் பயணம்.

ஆனால் அதுவே பாதுகாப்பானது.

ஆர்கட் தன் பேச்சினை முடித்துக்கொண்டு சொன்னான் : உலகில் நீங்கள் கனவு காண்பதை விடவும் அதிக செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இப்போதே நான் சொன்னபடி திட்டமிட்டு உழைக்க ஆரம்பியுங்கள். முன்னேறுங்கள், செல்வந்தர் ஆகுங்கள். அது உங்கள் உரிமை!

என்ன பாஸ், இந்த 7 ஸ்டெப்ஸை யூஸ் பண்ணி முன்னேற நீங்களும் ரெடியா?

No comments: